பெங்களூருவில் இருந்து நாய்க் குட்டியை மும்பை வீட்டிற்கு அழைத்து வர பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் மும்பையில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் பெங்களூர் சென்றுள்ளார்.
இதுகுறித்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “தொழிலதிபர், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் ஜூன் 4 ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு அவர்களின் தனியார் ஜெட் விமானம் மூலம் தரையிறங்கினர். அவர்கள் மூன்று பேரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தனர். சில வகைகளைத் தவிர்த்து, அண்டை மாநிலத்தைச் சேர்ந்த பயணிகள் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டும் என்பது விதி. கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்கும் பயணிகளுக்கும் இது பொருந்தும்.
இந்த தொழிலதிபரின் குடும்பம் பூனேவில் உள்ள ரூபி ஹால் கிளினிக்கில் பரிசோதனை எடுத்த சான்றிதழை வைத்திருந்தனர். கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஒப்புதல் அளித்த ஆய்வகங்களின் பட்டியலில் அந்த கிளினிக் பெயர் இல்லாததால் விமான நிலையத்தில் சில குழப்பங்கள் நிலவியது. ஆனால் அந்த கிளினிக் ஐசிஎம்ஆர் ஒப்புதல் பெற்றது எனவும் விமான நிலைய ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட முதல் பட்டியலில் அது இடம் பெறவில்லை என்பதும் பின்னர் தெரியவந்தது. அவர்கள் மூவரும் தங்கள் நாய்க் குட்டியை அழைத்துச் செல்வதற்காக நகரத்திற்கு வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மூவரும் ஹென்னூரில் உள்ள ஒரு நாய்க் குட்டியை எடுத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்தில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பினர். அந்த குடும்பம் நாய்குட்டியை தத்தெடுத்ததாக நாங்கள் நம்புகிறோம் எனத் தெரிவித்தனர்.