இந்தியா

மும்பையில் குறைந்த மழைப்பொழிவு : மெல்ல திரும்பும் இயல்பு வாழ்க்கை

மும்பையில் குறைந்த மழைப்பொழிவு : மெல்ல திரும்பும் இயல்பு வாழ்க்கை

webteam

மும்பையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழை தற்போது குறைந்திருப்பதால், அங்கு இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மும்பையில் கனமழை பெய்து வந்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. மழை காரணமாக ரயில்க‌ள், விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சாலை போக்குவரத்தும் வெகுவாக பாதிப்படைந்தன. புறநகர் பகுதியான மலாட்டில், சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்தனர். 78 பே‌ர் படுகாயமடைந்தனர். இது தவி‌ர இடி, மின்சாரம் தாக்கி சிலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மும்பையில் மழைப்பொழிவு குறைந்து இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்புகிறது. பள்ளி, கல்லூரிகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. இரு நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட புறநகர் ரயில்கள் மீண்டும் பயணிகள் கூட்டத்துடன் காணப்படுகிறது. எனினும் பல இடங்களில் வெ‌ள்ளம் வடியாத காரணத்தினால், ரயில்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன. வானிலை தொடர்ந்து சீராகாத காரணத்தினால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மும்பையில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் எச்சரித்துள்ளது.