இந்தியா

படிப்பதற்காக வீட்டிற்குள் பூட்டி வைத்த சிறுமி தீயில் கருகிய சோகம்

படிப்பதற்காக வீட்டிற்குள் பூட்டி வைத்த சிறுமி தீயில் கருகிய சோகம்

Rasus

மகள் வீட்டைவிட்டு வெளியே எங்கு செல்லாமல் படிக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர் வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளனர். அந்த நேரம் ஏற்பட்ட தீ விபத்தில் மகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிராவின் தாதர் புறநகர் பகுதியில் காவல்நிலைய வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் நிறைய அபார்மென்ட் வீடுகளும் உள்ளன. இந்த அபார்மென்ட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவத்தன்று சிறுமி ஷரவானி சவானின் பெற்றோர் ஒரு திருமணத்திற்கு சென்றுள்ளனர். சிறுமி வீட்டை விட்டு வெளியே எங்கும் சென்றுவிட கூடாது என்பதற்காகவும், விளையாடாமல் படிக்க வேண்டும் என்பதற்காவும் சிறுமியை ஒரு அறையினுள் பூட்டி வைத்துவிட்டு பெற்றோர்கள் சென்றுவிட்டனர்.

இந்த நேரத்தில்தான் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுமி கதவை திறந்து வெளியே வர முயற்சித்தும் அவரால் வெளியே வரமுடியவில்லை எனக் கூறப்படுகிறது. சுமார் மூன்று நேர போராட்டத்திற்குப் பின் தீ அணைக்கப்பட்ட நிலையில் சிறுமி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறுமி ஏற்கெனவே  உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே சிறுமியின் அறையில் இருந்து மண்ணெண்ணெய் அல்லாத ஒரு காலி டப்பாவை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஏசியில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் இது தானாக ஏற்பட்ட விபத்துதானா..? இல்லை வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.