நீதிமன்றம்
நீதிமன்றம் ட்விட்டர்
இந்தியா

‘கணவர் அவரது தாய்க்குப் பணம் கொடுப்பது குடும்ப வன்முறை அல்ல’ - பெண்ணின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

PT WEB

மும்பை 'மந்த்ராலயா'வில் (மாநில செயலகம்) உதவியாளராக பணிபுரியும் பெண் ஒருவர், தன் கணவர் மற்றும் மாமியார்மீது குடும்ப வன்முறையிலிருந்து பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் தன் மாமியாருக்கு மனநோய் இருப்பதாகவும் அதனை மறைத்து ஏமாற்றித் தன்னைத் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் அதில், தனது கணவர் 1993 முதல் 2004 வரை வெளிநாட்டில் தங்கி இருந்ததாகவும், பின்னர் அவர் விடுப்பில் இந்தியா வரும்போதெல்லாம் அவரின் தாயை மட்டும் சந்திப்பதும், வருடந்தோறும் ரூ.10,000 தொகையை அவருக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டதாகவும், அவரின் கண் அறுவை சிகிச்சைக்காகப் பணம் செலவழித்ததாகவும் அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அந்தப் புகாரில், தன் மாமியார் குடும்பத்தினர்களும் தன்னைத் துன்புறுத்துவதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால் இந்தப் புகாரை கணவர் வீட்டார் முற்றிலும் மறுத்துள்ளனர்.

இதுகுறித்த அவர் கணவர் அளித்த பதிலில், ’என் மனைவி என்னை ஒருபோதும் கணவனாகப் பார்த்ததில்லை. எனக்கே தெரியாமல் தன் என்.ஆர்.இ. கணக்கிலிருந்து ரூ.21.68 லட்சத்தை எடுத்து ஒரு பிளாட் வாங்கியுள்ளார்’ என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர், தன் மனைவிக்கு விவாகரத்து கோரி நோட்டிஸ் அனுப்பி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக அந்தப் பெண் அளித்த மனு நிலுவையிலிருந்தபோது அவருக்கு மாதம் ரூ.3,000 இடைக்கால பராமரிப்பு வழங்கியிருந்தது. தற்போது இந்த வழக்கின் மற்ற சாட்சிகளை விசாரித்துப் பதிவு செய்ததன் அடிப்படையில், நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்துள்ளது. மேலும், வழக்கு நிலுவையிலிருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவுகளும், நிவாரணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து அந்தப் பெண் அமர்வு நீதிமன்றத்தில் கிரிமினல் மேல்முறையீடு செய்தார். இருப்பினும் சாட்சிகளை ஆய்வுசெய்ததில், பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தெளிவில்லாமல் இருப்பதனாலும், அவர்கள் பெண்ணைக் குடும்ப வன்முறைக்கு உட்படுத்தினார்கள் என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை எனவும் அமர்வு நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையில் நீதிமன்றம், “அந்தப் பெண்ணிற்கு தன் கணவர் அவர் அம்மாவிற்குப் பணம் கொடுக்கிறார் என்பதையும், அவருடன் நேரம் செலவிடுகிறார் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது தெரிய வருகிறது. ஆனால் இதன் அடிப்படையில் அவர் குடும்ப வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார் என்று கூறுவதில் நியாயம் இல்லை. இந்த விசாரணை, தன் கணவர் விவாகரத்து கோரி நோட்டிஸ் அனுப்பிய பின்னரே தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் எந்த நிவாரணத்திற்கும் அந்தப் பெண்ணுக்கு உரிமை இல்லை. அந்தப் பெண்ணின் மகள் திருமணமாகாதவர் என்பதாலேயே அவருக்கு பராமரிப்புத் தொகை வழங்கப்படலாம் என்ற வாதத்தையும் ஏற்க முடியாது” என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து நீதிபதி மேலும் கூறுகையில், ‘விசாரணை நீதிமன்றத்தின் தடை செய்யப்பட்ட தீர்ப்புக்கு, இந்த நீதிமன்றத்தின் தலையீடு தேவையில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.