மும்பையின் கோஸ்டல் ரோட்டில், மரைன் டிரைவ் பகுதியில் இருந்து ஹாஜி அலி நோக்கி கருப்பு நிற BMW கார் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை சுமார் 5.20 மணியளவில் லோட்டஸ் ஜெட்டி அருகே சென்றபோது, அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கோஸ்டல் ரோட்டின் பாலத்தில் இருந்து சுமார் 75 அடி கீழே கார் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நாயர் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியின் தகவலின்படி, பலியானவர்களில் சனய் கஜ்ஜால் (21) மற்றும் திர்யா சேத் (17) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்படாத 25 வயது மதிக்கத்தக்க மற்றொரு ஆணும் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோது இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த 20 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மும்பையின் பரபரப்பான கோஸ்டல் ரோட்டில் அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.