ஓலா ட்ரைவர், அனிஷா தீக்ஷித்
ஓலா ட்ரைவர், அனிஷா தீக்ஷித் pt web
இந்தியா

‘அப்பாவும் இறந்துட்டார்.. எல்லாம் போச்சு’ ரீல்விட்ட OLA டிரைவர்.. பணத்திற்காக என்னென்ன சொல்றாங்க?

Angeshwar G

பேருந்துப் பயணங்களில் நீங்கள் கவனித்திருக்கலாம். சிலர் இரவில் குடிபோதையில் இருந்தால், தங்களது பணத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டதாகவும், ஊருக்குப்போக பணம் இல்லை என்றும் 20 அல்லது 30 ரூபாய் இருந்தால் கொடுங்கள் என கேட்பார்கள். இன்னும் சில தினங்களில் நீங்கள் அதேமாதிரி, அதே நேரத்தில் அதே பேருந்தில் சென்றால் மீண்டும் அவரே வந்து அதேபோல் கேட்பார். இது ஒரு எடுத்துக்காட்டு.

இதுவே நீங்கள் ஓலாவில் கார் புக் செய்கிறீர்கள். அந்த ஓட்டுநர் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக சொல்கிறார். இதையே அதிகமானோரிடம் சொல்கிறார். சிலர் இரக்கப்பட்டு பணம் கொடுக்கிறார்கள். உங்களிடமும் அதையே எதிர்பார்க்கிறார். ஆனால் உங்களுக்கு சந்தேகம் வருகிறது.. என்ன செய்வீர்கள். இதேமாதிரியான ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

யூடியூபர் அனிஷா தீக்ஷித், ஓலா டிரைவர் ஒருவருடன் நடந்த உரையாடலை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மும்பையில் உள்ள பாந்த்ராவில் தனது வீட்டில் இருந்து வாகனத்தை புக் செய்த நிலையில், அவர் வாகனத்தில் ஏறியதும் அந்த வாகன ஓட்டுநர் அழ ஆரம்பித்துள்ளார்.

தனது தந்தையை இழந்துவிட்டதாகவும், ஒரு மணி நேரத்திற்கு முன் தன்னிடம் இருந்ததை சிலர் கொள்ளையடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பயணம் முழுவதிலுமே தனது தற்கொலை எண்ணத்தையே வெளிப்படுத்தி வந்துள்ளார். இதையெல்லாம் புகாராக அளிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், மீண்டும் மீண்டும் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

அதே சமயத்தில் தனது முன் இருக்கும் கண்ணாடி மூலம் அனிஷா என்ன செய்கிறார் என்பதையும் அடிக்கடி அந்த டிரைவர் கவனித்துள்ளார். இதைக் கண்டுகொண்ட அனிஷா மோசடி செயலாக இருக்கலாம் என உணர்ந்துள்ளார். இதனையடுத்து அனிஷா, தான் அவசரமாக போன் செய்ய வேண்டும் என்றும் எனவே வண்டியை நிறுத்துமாறு கேட்டும், ஓட்டுநரோ வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டியதாகவும் தீக்ஷித் தெரிவித்துள்ளார். இது பயணிகளிடம் பணம் பறிக்கும், முயற்சி என உணர்ந்த அவர் இந்த வீடியோவை வெளியிட்டு இதுகுறித்தான விழிப்புணர்வையும் ஏற்படுத்த முயற்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் முதலில் வெளியிட்ட வீடியோ வைரலானது. இதனையடுத்து, ஓலா கேப்ஸில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் அந்த ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவலையும் அனிஷா அடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 2021-ஆம் ஆண்டு முதல் அந்த ஓட்டுநர் பல புகார்களை எதிர்கொண்டு வருவதாகவும், மோசடி நீண்ட காலமாக நடந்துகொண்டிருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவரது வீடியோ பதிவிற்கு கீழேயே பலரும் தங்களது அனுபவங்களைப் பதிவிட்டுள்ளனர். தான் ஏற்கெனவே அந்த நபரை பார்த்துள்ளதாக ஒருவர் கூற, அவரிடம் நான் பணம் கொடுத்துள்ளேன் என வேறொரு நபர் பகிர்ந்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் பெருநகரங்களில் ஓலா, ரேபிடோ, ஊபர் போன்ற செயலிகளின் தேவையை நம்பியுள்ள பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது.