இந்தியா

முல்லைப்பெரியார் அணையில் ஐவர் குழு இன்று ஆய்வு

webteam

வடமேற்கு பருவமழைக் காலம் என்பதால் முல்லைப்பெரியாறு அணையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஐந்து பேர் கொண்ட துணக்கண்காணிப்பு குழு இன்று ஆய்வு நடக்கிறது.

முல்லைப்பெரியாறு அணையில் மூன்று மாதங்களுக்குப்பின், மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் தலைமையிலான ஐவர் கொண்ட துணைக் கண்காணிப்புக்குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர். கேரளாவில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில். பருவமழைக் காலங்களில் அணையில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இன்று நடக்கும் இந்த ஆய்வில் தமிழக, கேரள அரசு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் ராஜேஷ் தலைமையில் நடக்கும் இந்த ஆய்வில் தமிழக பொதுப்பணித்துறை செற்பொறியாளர் சுப்ரமணி, உதவி கோட்ட பொறியாளர் சாம் இர்வின், கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் கிரிஜாபாய், உதவி பொறியாளர் பிரசீத் பங்கேற்கின்றனர். 

மேலும் அணையின் பிரதான அணை, பேபி அணை, அணையின் சுரங்க பகுதிகள், அணையின் மதகுகள் இயக்கம் சரிபார்ப்பு, அணைக்கான நீர்வரத்து, வெளியேற்றம், மழைப்பதிவு, கசிவு நீர் அளவு ஆகியன ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. ஆய்விற்கு பின் குமுளியில் உள்ள மூவர்
கண்காணிப்புக்குழு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அணையின் ஆய்வறிக்கை, மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளரும் மூவர் கண்காணிப்பு குழு தலைவருமான குல்சன் ராஜ்ஜிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கு முந்தைய துணைக்குழு ஆய்வு கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.