இந்தியா

திரிணாமூல் மூத்த தலைவர் முகுல் ராய் 6 வருடம் சஸ்பெண்ட்

திரிணாமூல் மூத்த தலைவர் முகுல் ராய் 6 வருடம் சஸ்பெண்ட்

rajakannan

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பா.ஜ.க. மேலிடத் தலைவர்களுடன் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிணாமூல் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் முகுல் ராய். பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராகவும் பதவி வகித்துவரும் இவர், மம்தா பானர்ஜிக்கு அடுத்தபடியாக துணைத்தலைவராகவும் பதவிவகித்தார். அக்கட்சியின் இரண்டாவது தலைவராக மதிக்கப்பட்டு வந்தார்.

சமீபகாலமாக பா.ஜ.க. மேலிடத் தலைவர்களுடன் முகுல் ராய் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பதவியில் இருந்தும், பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் முகுல் ராய் விடுவிக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். இதனால், கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் முகுல் ராய் ஒதுங்கி வந்தார். 

இந்த நிலையில், இன்று காலை கொல்கத்தா நகரில் செய்தியாளர்களை சந்தித்த முகுல் ராய் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். துர்கா பூஜைக்கு பிறகு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்தும் ராஜினாமா செய்ய உள்ளதாக அப்போது கூறினார். அவர் அறிவித்த சில மணி நேரங்களில் முகுல்ராயை கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்வதாக அறிவிக்கப்பட்டது.

சஸ்பெண்ட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி, “நாங்கள் எங்களது சொந்த கட்சி குறித்து கவலை கொண்டுள்ளோம். முகுல் ராய், கட்சிக்கும் தலைவர் மம்தா பானர்ஜிக்கு உண்மையாக இல்லாமல் இருந்துள்ளார். மம்தா பானர்ஜி அவருக்கு எல்லாமே கொடுத்தார். ரயில்வே அமைச்சர் ஆனார். மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். ராய் மீது மம்தா அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் அவர் கட்சிக்கும், தலைவருக்கும் துரோகம் செய்துவிட்டார். கட்சி கட்டுப்பாடுகளை மீறியதற்காக முகுல்ராய் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.