இந்தியா

‘பெண் சமூகம் எனக்கு எதிராக மாறும் என்று நான் கவலைப்படவில்லை’ முகேஷ் கண்ணா

Veeramani

பாலிவுட் நடிகர் முகேஷ்கண்ணா ஒரு நேர்காணலில் பெண்கள் ஆண்களுடன் போட்டியிடக்கூடாது, ஆண்கள் வேலைக்குச் செல்லும்போது, பெண்கள் வீட்டில் இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார் இது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மீ டூ இயக்கம் பற்றி பேசும் பழைய வீடியோவையும் பகிர்ந்துள்ள முகேஷ் கண்ணா “எனது பேச்சு மிகவும் தவறாக எடுக்கப்படுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, நான் பெண்களுக்கு எதிரானவன் என்று கூறப்படுகிறது. பெண்கள் மீது எனக்கு இருக்கும் மரியாதை யாருக்கும் இருக்காது. பெண்களின் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படுகிறேன். ஒவ்வொரு பாலியல் வன்கொடுமை வழக்குக்கும் எதிராக நான் பேசியுள்ளேன். பெண்கள் வேலை செய்யக்கூடாது என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. பெண்கள் வேலைக்கு செல்லும்போது வீட்டில் குழந்தைகள் தனியாக இருப்பதை பற்றியும், ஆண் மற்றும் பெண் தர்மத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன், இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகிறது, ”என்றார்.

மேலும் “இந்த அறிக்கையால் எந்தவொரு பெண்ணும் காயமடைந்திருந்தால், என் கருத்தை சரியாக வைக்க முடியவில்லை என்பதற்காக வருந்துகிறேன். பெண் சமூகம் எனக்கு எதிராக மாறும் என்று நான் கவலைப்படவில்லை. அவர்கள் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டியதில்லை. என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நான் எப்படி வாழ்ந்தேன், எப்படி வாழ்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும்” என கூறியுள்ளார்

அந்த சர்ச்சைக்குரிய வீடியோவில் அவர் “ஒரு பெண்ணின் வேலை வீட்டை கவனித்துக்கொள்வது. பெண்கள் வேலை செய்யத் தொடங்கியதும்தான் #மீ டு போன்ற பிரச்சினைகள் தொடங்கியது. இன்று பெண்கள் ஆண்களுடன் தோளோடு தோள் நடப்பது பற்றி பேசுகிறார்கள். பெண்களின் விடுதலையைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் பிரச்சினை எங்கிருந்து தொடங்குகிறது என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். பெண்கள் வேலைக்கு செல்வதால் அவதிப்படும் முதல் நபர் குழந்தை, ஏனென்றால் அவருக்கு வீட்டில் பராமரிக்க தாய் இல்லை. அவர் நாள் முழுவதும் தனது ஆயாவுடன் உட்கார்ந்து டிவி பார்க்கிறார்’ என கூறியிருந்தார்