இந்தியா

செயற்கை நுண்ணறிவு மனித மூளைக்கு மாற்றாகாது - முகேஷ் அம்பானி

JustinDurai

இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கும் செயற்கை நுண்ணறிவு உதவும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு குறித்த RAISE 2020 என்ற பெயரில் மாபெரும் மெய்நிகர் மாநாட்டை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இணைந்து நேற்று முதல் 9-ம் தேதி வரை நடத்துகின்றன.

இம்மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். சர்வதேச செயற்கை நுண்ணறிவுத் துறையின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு விவாதங்கள் நடத்துகின்றனர்.

இதில் பேசிய ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, ‘’ செயற்கை நுண்ணறிவு ஒருபோதும் மனித மூளைக்கு மாற்றாகாது. மாறாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் 4வது தொழில்துறை புரட்சியின் பிற தொடர்புடைய தொழில்நுட்பங்கள் இந்தியாவிற்கும் உலகிற்கும் முன்னால் உள்ள அழுத்தமான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான நமது திறனை பெரிதும் விரிவுபடுத்தும்.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் வளர்ச்சி பெற தரவுகளே அடிப்படைத் தேவை. தரவுகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு திட்டம் கொண்டுவர வேண்டும். இந்தியாவில் வளர்ந்துவரும் தகவல் மையங்கள் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் முன்னெடுப்புகள் நாட்டில் டிஜிட்டல் புரட்சியை வளர்த்தெடுத்தது. நுண்ணறிவு தரவுகள்தான் டிஜிட்டல் மூலதனம்.


1.3 பில்லியன் இந்தியர்களை டிஜிட்டலாக தொழில்நுட்பத்தில் வளர்த்தெடுப்பதுதான் வேகமான வளர்ச்சி, சிறப்பான வாய்ப்புகளை உருவாக்கும். கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீண்டெழும் சக்தி இந்தியாவுக்கு உள்ளது’ என்று தெரிவித்தார்.