முகேஷ் அம்பானி முகநூல்
இந்தியா

சிக்கலில் முகேஷ் அம்பானியின் ரூ.15,000 கோடி ’ஆன்டிலியா’ இல்லம்? வக்பு வாரியத்திற்கு சொந்தமானதா?

ஒரு நிலம் வக்புக்கு கொடுக்கப்பட்டால், அது ஆதரவற்றவர்களுக்கும் வீடுகள் கட்டவும், ஆன்மிக பள்ளி கட்ட போன்ற நோக்கங்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும் .

ஜெனிட்டா ரோஸ்லின்

உலகிலேயே பக்கிங்காம் அரண்மனைக்கு அடுத்ததாக இரண்டாவது விலையுயர்ந்த வீடாக இருப்பது தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீடு. இந்த வீடுதான் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா வீடு சுமார் 4.5 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் 15,000 கோடி.

கடந்த 2002 ஆம் ஆண்டு சுமார் ரூ.21 கோடிக்கு வாங்கிய இந்த வீட்டில்தான், முகேஷ் அம்பானி அவரது மனைவி நீதா அம்பானி அவர்களது குழந்தைகளான ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானியின் குடும்பமும் வசித்து வருகிறது. மும்பையில் கும்பலா மலையில் உள்ள ஆடம்பரமான அல்டமவுண்ட் சாலையில் உள்ள இந்த வீட்டில் 27 மாடிகள் உள்ளது.

விரிவான உடற்பயிற்சி கூடம், ஒரு உலகத்தரம் வாய்ந்த ஸ்பா, ஒரு தனியார் தியேட்டர், மொட்டை மாடி தோட்டம், உட்புற நீச்சல் குளங்கள், அத்துடன் ஒரு கோவில் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட உயர்மட்ட வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்தவீடுதான் சட்டசிக்கலில் சிக்கியுள்ளது. காரணம்: வக்பு சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதுதான்.

முகேஷ் அம்பானி இருக்கும் இந்த நிலம், கோஜா சமூகத்தைச் சேர்ந்த ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு அறக்கட்டளை நிறுவனத்திற்கு சொந்தமானது. கரீம் பாய் இப்ராஹிம் என்பவர் இந்த நிலத்தை வக்பு வாரியத்திற்கு தானமாக வழங்கியுள்ளார். ஒரு நிலம் வக்புக்கு கொடுக்கப்பட்டால், அது ஆதரவற்றவர்களுக்கும் வீடுகள் கட்டவும், ஆன்மிக பள்ளி கட்ட போன்ற நோக்கங்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும் .

இந்தநிலையில்தான், ஏப்ரல் 2002 இல், கரிம்போய் கோஜா அறக்கட்டளை, முகேஷ் அம்பானியுடன் தொடர்புடைய ஆன்டிலியா கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (ACPL) நிறுவனத்திற்கு தோராயமாக ரூ.21 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. அன்றுமுதல் இது அம்பானியின் நிலமானது. இந்த நிலத்தில்தான் தற்போது அம்பானியின் வீடு அமைந்துள்ளது.

ஏற்கெனவே, இது தொடர்பாக மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வக்ப் வாரியத்துக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்தை தனியாருக்கு விற்க சட்டத்தில் இடம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த நில விற்பனையின் சட்டப்பூர்வ அனுமதி குறித்து சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக கரீம் பாய் அறக்கட்டளை மற்றும் வக்ஃப் வாரியம் இணைந்து தீர்வு காண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், ஏப்ரல் 5 ஆம் தேதி வக்பு வாரிய சீர்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டத்திருத்தமாக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நிலுவையிலிருக்கும் வழக்கை நீதிமன்றம் விசாரித்து, இந்த நிலம் அம்பானிக்கு சொந்தமில்லை என்று கூறினால் நிச்சயம் அவர்கள் வீட்டை இழக்கும் அபாயம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.