இந்தியா

உச்சத்தில் விலை ! அப்படி என்ன "வெங்காயம்" ? அதன் வரலாறு என்ன ?

உச்சத்தில் விலை ! அப்படி என்ன "வெங்காயம்" ? அதன் வரலாறு என்ன ?

jagadeesh

நமது சமையலில் முக்கியம் அங்கம் வகிக்கும் வெங்காயம் தற்போது நாட்டின் பொருளாதாரத்தையே தீர்மானிக்கும் ஒன்றாக மாறி இருக்கிறது. மனிதன் விவசாயம் செய்ய ஆரம்பிப்பதற்கும், எழுத்தறிவு பெறுவதற்கும் முன்பே வெங்காயத்தை உட்கொண்டிருப்பதற்கு சான்றுகள் உள்ளன. முதன் முதலில் மத்திய ஆசியாவில் வெங்காயம் பயிரிடப்பட்டதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூறும் நிலையில், சிலர் ஈரான் மற்றும் மேற்கு பாகிஸ்தானில் உருவானதாக கூறுகின்றனர். 

சுமார் 5 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே மனித வாழ்க்கைக்குள் நுழைந்த ஒன்றுதான் இந்த வெங்காயம். நமது நாட்டிற்கு 6000 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்யும் எகிப்தில், வெங்காயத்தை வெறும் சமையல் பொருளாக மட்டும் பார்ப்பதில்லை. வெங்காயத்தை புனிதமான ஒன்றாக கருதும் எகிப்தியர்கள், அதற்கு இறுதி சடங்குகளில் தனி முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட மம்மிக்கள் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உடல்களுடன் வெங்காயமும் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மம்மிக்கள் வைக்கப்பட்டிருந்த பிரமிடுகளில் வெங்காயத்தில் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளனவாம். ரோமானிய வரலாறுகளிலும், ஐரோப்பிய வரலாறுகளிலும் வெங்காயத்திற்கு தனி முக்கியத்துவம் உள்ளது.

வரலாறு ஒரு புறமிருக்க, வெங்காயத்தின் வகைகள் மற்றொரு சுவாரஸ்யம். சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், என இரண்டுதானே இதில் என்ன சுவாரஸ்யம் என நினைக்கலாம். ஆனால், 21 வகையான வெங்காயங்கள் உள்ளனவாம். பெர்முடா வெங்காயம், வெள்ளை வெங்காயம், சிப்போலினி வெங்காயம், எகிப்த் வெங்காயம், பச்சை வெங்காயம், லீக்ஸ் வெங்காயம், மாவி வெங்காயம், முத்து வெங்காயம், ஊறுகாய் வெங்காயம், ஸ்பானிஷ் வெங்காயம், மஞ்சள் வெங்காயம், வெல்ஷ் வெங்காயம் என பட்டியல் நீள்கிறது. இவற்றில் சிகப்பு வெங்காயம் மற்றும் ஷேலட்ஸ் எனப்படும் சின்ன வெங்காயம்தான் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய வெங்காய வகைகள். இனி நாம் ஒவ்வொரு முறையும் வெங்காயம் என சாதரணமாக கூறும்போது, அதற்கு பின் இவ்வளவு விஷயங்கள் உள்ளன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.