கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெற்ற 15 தொகுதிகளில் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. 6 தொகுதிகளில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில், எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பிழைக்குமா? அல்லது கவிழுமா? என்பது இன்று பிற்பகலில் தெரியவரும்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு அளித்த ஆதரவை, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளைச் சேர்ந்த 17 அதிருப்தி எம்எல்ஏக்களும் திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டதை அடுத்து, காலியான இடங்களில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் 13 பேர் பாரதிய ஜனதா வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர்.
தற்போதைய நிலையில் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கு ஒரு சுயேச்சை உள்பட 106 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 66 எம்எல்ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 34 எம்எல்ஏக்களும் உள்ளனர். இதை தவிர பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும், ஒரு நியமன எம்எல்ஏவும் உள்ளனர்.
இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நீடிக்கும். இல்லாவிட்டால் அங்கு தற்போதைய அரசு நீடிப்பதில் சிக்கல் ஏற்படும். இடைத் தேர்தலில் காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் தனித்து போட்டியிட்டுள்ளன. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இல்லாதபட்சத்தில் இவ்விரு கட்சிகளும் மீண்டும் கைகோர்ப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதே சமயம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாரதிய ஜனதா 9 முதல் 12 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றன. எடியூரப்பாவும், தங்களது கட்சி 13 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இடைத் தேர்தல் முடிவு பாரதிய ஜனதாவுக்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் வாழ்வா? சாவா பிரச்னை என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். இதில் கணிசமான இடங்களில் வென்றால் மட்டுமே, தன் மீதான எதிர்ப்புகளை அவரால் சமாளிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.