இந்தியா

காஷ்மீரில் ரோந்து பணிக்கு செல்கிறார் தோனி!

காஷ்மீரில் ரோந்து பணிக்கு செல்கிறார் தோனி!

webteam

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி, வரும் 31 ஆம் தேதி முதல் காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபடுவார் என இந்திய ராணு வம் அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். அவ்வப்போது ராணுவ வீரர்களுடன் உரையாடும் தோனி, ராணுவ குழுவுடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்டிருந்தார். 

இதனால் இந்திய கிரிக்கெட் அணியின், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கு தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சிப் பெற ராணுவ தளபதி பிபின் ராவத், தோனிக்கு அனுமதி வழங்கினார். காஷ்மீரில், இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் ராணுவ நடவடிக்கையில் பங்குபெற அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே பாராசூட் ரெஜிமெண்டுடன் தோனி நேற்று இணைந்தார் என்றும் அங்கு ராணுவப் பயிற்சியை மேற்கொண்ட அவர், 2 மாத காலம் பயிற்சி பெறுவார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், அவர் வரும் 31 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை, விக்டர் படையுடன் இணைந்து ரோந்து பணி யில் ஈடுபட இருப்பதாக, ராணுவம் தெரிவித்துள்ளது. காஷ்மீரில், சக வீரர்களோடு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் அவர் ரோந்துப் பணிக்குப் பின், வீரர்களோடே தங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.