இந்தியா

விராட், சச்சினை விட தோனிக்கே அதிக ரசிகர் பட்டாளம் - ஆய்வில் தகவல்

விராட், சச்சினை விட தோனிக்கே அதிக ரசிகர் பட்டாளம் - ஆய்வில் தகவல்

rajakannan

கேப்டன் விராட் கோலி, முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரை விட மகேந்திர சிங் தோனி மிகவும் பிரபலமானவர் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 

நீண்ட காலமாக கிரிக்கெட் உலகில் கோலோச்சி வந்த தோனி, தனது கிரிக்கெட் பயணத்தின் இறுதி பக்கங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். சிறந்த பினிஷர் என்று அழைக்கப்பட்ட தோனி தற்போது 30 ரன்களை கடக்கவே மிகவும் சிரமப்பட்டு வருகிறார். மோசமான பாஃர்ம் காரணமாக, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவருக்கு, டி20 போட்டிகளில் கூட வாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது. 50 ஓவர் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.

மோசமாக பாஃர்மை வெளிப்படுத்தி வந்தபோதிலும், தோனியின் மீதான அன்பு அவரது ரசிகர்களுக்கு இன்னும் குறைந்தபாடில்லை. அதற்கு காரணம் ஆட்டத்தின் போதும், அதற்கு வெளியேயும் அவர் நடந்து கொள்ளும் பண்பு தான். எத்தனையோ வெற்றிகளை குவித்த அவர், வெற்றியின் தருணங்களின் போது அவ்வளவு நிதானத்துடனும், பண்புடனுமே நடந்து கொண்டார். ‘கேப்டன் கூல்’ என்ற அந்த ஒரு வார்த்தை போதும். அதனால்தான், தோனியின் ரசிகர்கள் வட்டத்தையும் தாண்டி அவர் மீது அன்பு கொண்டவர்கள் அதிகம். களத்தில் இல்லாத இந்தத் தருணத்திலும் தோனிக்கான ரசிகர் பட்டாளம் குறையாமல் இருக்கின்றனர். 

இதனை உறுதி செய்யும் வகையில், ‘YouGov Influencer Index 2018’ ஆய்வு முடிவுகள் உள்ளன. இந்தியாவின் மிகவும் பிரபலமான மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே அடுத்து மூன்றாவது நபராக தோனி உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 4வது இடத்திலும், கேப்டன் விராட் கோலி 6வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவில் உள்ள 60 பிரபலங்கள் குறித்து, உலகளவில் சுமார் 60 லட்சம் பேரிடம், ஆன்-லைன் வழியாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 

5வது இடத்தை நடிகர் அக்ஷய் குமார் பிடித்துள்ளார். அமீர் கானும், ஷாருக்கானும் முறையே 7வது மற்றும் 8வது இடத்தை பிடித்துள்ளனர். நடிகைகள் ஆலியா பட் 9வது இடத்தையும், பிரியங்கா சோப்ரா 10வது இடத்தையும் பெற்றுள்ளனர்.