நிஷிகாந்த் துபே, மோடி எக்ஸ் தளம்
இந்தியா

"பாஜகவுக்கு மோடி தேவை; மோடிக்கு பாஜக தேவை அல்ல" - விவாதமாகும் எம்.பி. நிஷிகாந்த் துபேவின் பேச்சு!

பாஜகவைவிட பிரதமர் நரேந்திர மோடியே பெரியவர் என்றும், மோடி இல்லாவிட்டால் பாஜக 150 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது எனவும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே கூறி இருப்பது டெல்லி அரசியலில் பேசுபொருளாக மாறி இருக்கிறது

PT WEB

பாஜகவைவிட பிரதமர் நரேந்திர மோடியே பெரியவர் என்றும், மோடி இல்லாவிட்டால் பாஜக 150 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது எனவும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே கூறி இருப்பது டெல்லி அரசியலில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், 75 வயதானால் தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என பேசியது விவாதத்துக்கு வழிவகுத்தது. பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பரில் 75ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அதை மறைமுகமாக குறிப்பிட்டு மோகன் பகவத் பேசுகிறாரா என கேள்வி எழுந்தது.

நிஷிகாந்த் துபே

இந்நிலையில், மோகன் பகவத்தின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக பேட்டியளித்துள்ளார் ஜார்கண்ட் மாநில பாஜக எம்பி நிஷிகாந்த் துபே. ANI செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாஜக என்றால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மோடிதான் தெரிகிறார் என்றும், 2029 தேர்தலைக்கூட மோடி தலைமையில்தான் சந்திப்போம் எனவும் கூறியுள்ளார். மோடி இல்லாவிட்டால் பாஜக 150 இடங்களில்கூட வெற்றி பெறாது என்றும் தெரிவித்துள்ளார்.

இன்றைய நிலையில் பாஜகவுக்குத்தான் மோடி தேவை என குறிப்பிட்டுள்ள அவர், மோடிக்கு பாஜக தேவை அல்ல எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், மோடியின் பேச்சு இனி அரசியல் களத்தில் எடுபடாது என்பது ஆர்.எஸ்.எஸ்க்கு தெரிந்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.