குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் மக்களவை கொறடாவுமான மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
செவ்வாய் கிழமை அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக கூட்டணி வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளைப் பெற்றார். இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் சுதர்ஷன ரெட்டிக்கு எதிர்பார்த்ததைவிட 15 வாக்குகள் குறைவாகவே கிடைத்தன. செல்லாத வாக்குகளைத் தாண்டி இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சிலர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் தற்போது இது குறித்து அதிகாரபூர்வமற்ற முறையில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சிவசேனா உத்தவ் தாக்ரே பிரிவின் 3 வாக்குகளும், ஆம்ஆத்மி கட்சியின் 4 வாக்குகளும், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவின் 2 வாக்குகளும், சமாஜ்வாதி கட்சியின் 2 வாக்குகளும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஓரிரு வாக்குகளும் காங்கிரஸ் கட்சியின் ஒரு வாக்கும் என்ன ஆனது என்பதை சரியாக கணக்கிட முடியவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் கணக்கில் வராத வாக்குகள் செல்லாத வாக்குகள் அல்லது எதிரணி வேட்பாளருக்கு செலுத்தப்பட்டவை என்று உறுதியாகக் கூற முடியாது.
இந்நிலையில் சிவசேனா ஷிண்டே பிரிவு எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே, "இந்தியாகூட்டணி" எம்பிக்களுக்கு ஏன் நன்றி தெரிவித்தார் என்றும், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஏன் "மனசாட்சியின்படி அளிக்கப்பட்ட வாக்குகள்" என்று கொண்டாடுகிறார் என்றும் எக்ஸ் தளப்பதிவில் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சை ஆகியுள்ளது. குடியரசு துணைத்தலைவர் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுவதால் யார் எதிரணி வேட்பாளருக்கு வாக்களித்தார்கள், யாரெல்லாம் செல்லாத வாக்குகளை செலுத்தினார்கள் என்பதை கண்டறிவது மிகவும் கடினம் என்று இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ளனர்.