ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி pt web
இந்தியா

தீவிர பரிசீலனையில் INDIA கூட்டணியின் தலைமை மாற்றம்! - TMC MP சொல்வதென்ன?

இண்டியா கூட்டணிக்கு மம்தா பானர்ஜி தலைமையேற்கும் நேரம் வந்துவிட்டதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

PT WEB

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்வி, இண்டியா கூட்டணியின் தலைமை மாற்றம் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, மம்தா பானர்ஜி இண்டியா கூட்டணியின் தலைமையேற்க வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவையின் தேர்தல் முடிவுகள் வெளியாகி இண்டியா கூட்டணிக்கு பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் முடிவுகளின் படி, பாஜக கூட்டணி 202 இடங்களை வென்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ், ஆர்.ஜே.டி கூட்டணி 35 தொகுதிகளை மட்டுமே வென்று மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது. குறிப்பாக, இண்டியா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி பீகார் சட்டப்பேரவையில் 61 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தும் வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மீதும் மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீதும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

எம்.பி கல்யாண் பானர்ஜி

இந்நிலையில் தான், “இண்டியா கூட்டணிக்கு மம்தா பானர்ஜி தலைமையேற்கும் நேரம் வந்துவிட்டது” என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜகவை வீழ்த்தும் திறன் கொண்ட கட்சியே இண்டியா கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும் எனக்கூறியுள்ள அவர், அது காங்கிரஸ் கட்சியிடம் இல்லை என்பது தெளிவாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். பாஜகவை தங்கள் கட்சி தொடர்ந்து வீழ்த்தி வருவதால் மம்தா பானர்ஜி இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்பதே சரியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், மேற்கு வங்காளத்தில் கடைசியாக நடந்த 6 தேர்தல்களிலும் பாஜகவை திரிணமூல் காங்கிரஸ் வீழ்த்தியுள்ளதாகவும் அக்கட்சியினர் கூறுகின்றனர்.

ஏற்கனவே, இண்டியா கூட்டணிக்கு தலைமை வகிக்க, சமாஜ்வாதி, என்சிபி (சரத் பவார்) உள்ளிட்ட கட்சிகள் மம்தா பானர்ஜியின் தலைமைக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், பிகாரில் காங்கிரஸின் மோசமான தோல்வியின் மூலம், இண்டியா கூட்டணி தலைமை பற்றிய விவாதம் பேசுபொருளாகி வருகிறது.