இந்தியா

"ரூ.1-க்கு உணவு!" - கவுதம் காம்பீர் திறந்த உணவகம்

jagadeesh

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் காம்பீர் ரூ.1க்கு உணவு வழங்கும் 'ஜன் ரசோய்' எனும் உணவகத்தை திறந்துள்ளார்.

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனவர் காம்பீர்.  அதே தொகுதியில் காந்தி நகர் மார்க்கெட்டில் முதல் முதலாக ஜன் ரசாய் உணவகத்தை கடந்த 2019 டிசம்பரில் தொடங்கினார். இப்போது நியூ அசோக் நகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் ஒரே சமயத்தில் 50 பேர் சாப்பிடும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காம்பீர் கூறும்போது "நான் அரசியலுக்கு வந்தது நாடகம் நடத்தவோ அல்லது தர்ணா செய்யவோ அல்ல. ஆனால் ஒரு உண்மையான மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் இதை செய்கிறேன். என்னிடம் இருப்பவையை கொண்டு சமுதாயத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களக்கு என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். இதில் என்னுடைய பங்குடன் முடிந்துவிடாமல், ஓர் இயக்கமாக மாற வேண்டும்" என்றார்.

இது குறித்து பேசிய அம்மாநில பாஜக பொறுப்பாளர் பாண்டா "பல மாநிலங்களில் உள்ள அரசுகள் மானிய வகையில் உணவகங்களை திறந்துள்ளதை நாம் அறிவோம். ஆனால் காம்பீர் இப்போது செய்திருப்பது மிகவும் வித்தியாசமான முயற்சி. அதற்காக அவரை பாராட்டுகிறேன்" என்றார்.