இந்தியாவில் இஸ்லாமிய அரசாங்கத்தை நிறுவும் நோக்கில், சமூக ஊடகங்கள் மூலம் தீவிரவாத வலையமைப்பை உருவாக்க முயன்ற மத்தியப் பிரதேச ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் காசி கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஃபராஸ். இவர், போபாலில் உள்ள ஒரு மருத்துவமனையில் காம்பவுண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். அதேநேரத்தில், இவரும், இவரது மனைவியும் அவர்களது இல்லத்தில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்துள்ளனர். மேலும், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் குர்ஆன் பாடங்களையும் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இஸ்லாமிய அரசாங்கத்தை நிறுவும் நோக்கில், சமூக ஊடகங்கள் மூலம் தீவிரவாத வலையமைப்பை உருவாக்க முயன்றதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து மத்தியப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS)அவரைக் கைது செய்தது.
விசாரணையில், பல பாகிஸ்தானிய, இந்திய மற்றும் வெளிநாட்டு முஜாஹிதீன்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் தனக்குத் தொடர்பு இருப்பதாக ஃபராஸ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தேவைப்படும்போது, தீவிரவாதப் பயிற்சி பெறுவதற்காக மூன்றாம் நாடு வழியாக பாகிஸ்தானுக்குப் பயணம் செய்வதற்கு ஏதுவாக பாஸ்போர்ட்களைத் தயார் செய்யுமாறு உறுப்பினர்களிடம் அவர் கூறியதாகவும் தெரிகிறது. மத்தியப் பிரதேச பயங்கரவாதத் தடுப்புப் படையினர் அவரிடமிருந்து சில ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதில், தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (PFI) மிஷன் 2047 ஆவணமும் அடங்கும். இதேபோன்ற ஆவணங்கள் 2022-இல் கேரளாவிலும், 2024-இல் மகாராஷ்டிராவிலும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அநியாயமாகப் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் சமூகத்திடம், 2047-ஆம் ஆண்டுக்குள் அரசியல் அதிகாரம் மீட்டளிக்கப்பட வேண்டும் என்று அந்த ஆவணம் குறிப்பிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.