இந்தியா

திருப்பதி கோயில் மின்னணு திரைகளில் சினிமா பாடல்கள் ஒளிபரப்பானதால் அதிர்ச்சி

திருப்பதி கோயில் மின்னணு திரைகளில் சினிமா பாடல்கள் ஒளிபரப்பானதால் அதிர்ச்சி

நிவேதா ஜெகராஜா

திருப்பதியில் ஏழுமலையான் கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரைகளில் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு பதில் திரைப்பட பாடல் காட்சிகள் ஒளிபரப்பானதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோயிலை சுற்றியுள்ள மண்டபங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு ஆன்மிக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவது வழக்கம். இந்நிலையில், திரையில் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு பதிலாக திரைப்பட பாடல்கள் ஒளிபரப்பானதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதேநேரம் காட்சிகள் திரைப்படம் சார்ந்ததாக இருந்தாலும் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கான ஒலியே ஒலிபரப்பானது.

சுமார் அரை மணி நேரம் ஒளிபரப்பான இந்த காட்சிகளை பலர் படம்பிடித்து புகார் அளித்த நிலையில், ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த தேவஸ்தான கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி, ஒளிபரப்பு ஊழியரின் தவறு காரணமாக திரைப்பட பாடல்கள் ஒளிபரப்பானதாகவும் இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.