இந்தியா

'மாநில அரசுகளிடம் 94 லட்சம் தடுப்பூசிகள் மீதமுள்ளன' - மத்திய அரசு தகவல்

நிவேதா ஜெகராஜா

மத்திய அரசு இதுவரை எவ்வளவு தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு விநியோகித்திருக்கிறது என்பதை, அறிக்கையாக இன்று வெளியிட்டிருக்கிறது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு, இப்போதைக்கு இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிகள்தான். ஆனால் இந்தியாவில் தடுப்பூசிக்குத்தான் தட்டுப்பாடேவும்! இங்கே நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டை தடுத்தால்தான், கொரோனாவுக்கு ஒரு முடிவு வரும் என மருத்துவ வல்லுநர்கள் தொடர்ச்சியாக சொல்லிவருகின்றனர்.

தடுப்பூசி நிலைப்பாட்டுக்கு மத்திய அரசு காரணமா, அல்லது தடுப்பூசி நிறுவனங்கள்தான் காரணமா என்பது கடந்த சில தினங்களாகவே கடுமையாக விமர்சனத்துக்குள்ளாபட்டு வந்தது. இப்படியான சூழலில்தான், இன்று மத்திய அரசு தடுப்பூசி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், '94.47 லட்சம் கோவிட் - 19 தடுப்பூசிகள் மாநில அரசுகளிடம் மீதம் இருக்கின்றன. யூனியன் பிரதேசங்கள், அடுத்த 3 நாள்களில் 36 லட்சம் இலவச கொரோனா தடுப்பூசிகளை பெறும்' என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

இதுவரை, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கிட்டதட்ட 17.02 கோடி இலவச தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியிருப்பதாகவும், அவற்றில் "94.47 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள், இன்னமும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம், உபயோகிக்கப்படாமல் மீதம் இருக்கின்றன" எனக்கூறப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், தமிழகத்துக்கு இதுவரை ஏறத்தாழ 71 லட்சத்து தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் கிட்டதட்ட 67 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மீதம் 3 லட்சத்தையொட்டிய தடுப்பூசிகள் உபயோகிக்கப்படாமல் இருப்பதாகவும், கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளில் 8.83 தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.