இந்தியா

அதிகரிக்கும் கொரோனா: 10 மாநிலங்களில் உயர்மட்ட குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டம்!

Sinekadhara

நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 61ஆயிரம் பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கொரோனா அதிகம் உள்ள பத்து மாநிலங்களில் மத்திய சுகாதாரத்துறையின் உயர்மட்டக் குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 1,61,736 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 97,168 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 879 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொருத்தவரை மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மத்திய சுகாதாரத்துறையின் உயர்மட்டக் குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் கொரோனா அதிகம் உள்ள மாநிலங்களுக்கு தடுப்பூசியை அதிகமாக வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர், துணை குடியரசுத் தலைவர் ஆகியோர் ஆளுநர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. மேலும் கொரோனா பரவலால் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அந்தந்த மாநிலங்கள் திட்டமிட்டு வருகிறது.