இந்தியா

களப்பணியால் உயிரிழப்பு, பாதிப்புகள்...- கொரோனா 2ம் அலையில் இந்திய பத்திரிகையாளர்களின் நிலை

webteam

கொரோனாவின் 2-வது அலையில் சிக்கி நாடே திணறிக் கொண்டு இருக்கின்றது. இதில் பத்திரிகைத் துறையும் தப்பவில்லை. களப்பணியாற்றி வரும் பத்திரிகை துறையினர் பலரும் தங்கள் இன்னுயிரிழை இழந்து வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு தாங்கள் எளிதாக இலக்காவதுடன், தங்களது குடும்பத்தினர், உறவினர்களின் பாதிப்புக்கும் காரணமாகின்றனர்.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் களத்தில் இறங்கி பணியாற்றக்கூடிய ஏராளமான பத்திரிகையாளர்கள், புகைப்படப் பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் கொரோனா நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

'ஆல் இந்தியா நியூஸ் பேப்பர் எம்பிளோயீஸ் ஃபெடரேஷன்' அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு தகவலின்படி, கடந்த ஒரு வாரத்தில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் 13 பத்திரிக்கையாளர்கள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளது. நாளிதழ்கள், மாத இதழ்கள், செய்தித் தொலைக்காட்சி சேனல்கள் என பலவற்றிலும் நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றி கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி, பிறகு சிகிச்சை பலனின்றி இவர்கள் 13 பேரும் உயிரிழந்திருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும், ஏராளமான பத்திரிகையாளர்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருக்கின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்குத் தேவையான நிதி உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

டெல்லியில் பணிபுரிந்து வந்த 73 வயதான மூத்த பத்திரிக்கையாளர் ஜியூல் ஹக்காவ், கொரோனா காரணமாக உயிரிழந்தார். இவர் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' உள்ளிட்ட பல பிரபல பத்திரிகைகளில் பணியாற்றியவர்.

டெல்லியில் பணிபுரிந்த வந்த 69 வயதான மற்றொரு மூத்த பத்திரிகையாளரான கொசீரி அமர்நாத்தும் வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சீதாராம் யெச்சூரியின் மகனும், பிரபல பத்திரிகைகளில் பணியாற்றிய பத்திரிகையாளருமான ஆஷிஷ் யெச்சூரி சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மிக இளம் வயதிலேயே உயிரிழந்த ஆஷிஸ் மறைவிற்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

'டிவி 9 கன்னடா' சேனலின் டெல்லி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய 30 வயதான பிரதீப் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது.

'தி இந்து' பத்திரிகையின் மூத்த புகைப்படப் பத்திரிகையாளரான விவேக் கொரோனா காரணமாக உயிரிழந்தார். கொரோனா காலத்தில் மும்பை நகரின் பாதிப்புகளையும், கோரத்தாண்டவத்தையும் இவரது புகைப்படங்கள் மூலமாகத்தான் மக்கள் பலரும் தெரிந்துகொண்டனர்.

'தி பயனீர்' பத்திரிகையின் அரசியல் பிரிவு ஆசிரியர் தவிசி ஸ்ரீவஸ்தவா. உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பிரபலமான பத்திரிகையாளரான இவர், அனைத்து முதல்வர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். இவரும் கொரோனாவிற்கு பலியானார்.

பத்திரிகையாளர்கள் உயிரிழப்பைப் பொறுத்தவரை உத்தரபிரதேச மாநிலம்தான் மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'யூஎன்ஐ' செய்தி நிறுவனத்தின் லக்னோ தலைமை பத்திரிகையாளர் ஹிமான்சு ஜோசி, பிரபல ஹிந்தி பத்திரிகையான 'தன்க் ஜக்ரன்' பத்திரிக்கையின் சட்டப்பிரிவு பத்திரிக்கையாளர் அன்கித் சுக்லா, 'அமர் உஜாலா' பத்திரிகையின் துர்கா பிரசாத் சுக்லா, பிரஜேந்தர் பட்டேல், சிவானந்தன் சாஹூ,பிரசாந்த் சக்சேனா என உயிரிழந்த பத்திரிகையாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் என நாட்டின் பல பகுதிகளிலும் இவ்வாறு பத்திரிகையாளர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி உயிரிழந்து வருகின்றனர். பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினர் உறவினர்கள் என பலரும் தொற்றுக்கு ஆளாகி பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இவ்வாறு தொடர்ந்து பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு அதிகரித்து வரும் சூழலில், பத்திரிகையாளர்களை முன் களப்பணியாளர்கள் என கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தடுப்பூசி மற்றும் உரிய சிகிச்சை வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் தொடர்ந்து எழுந்து வருகின்றது. இதுகுறித்து ஏற்கெனவே காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கடிதம் எழுதி இருக்கின்றனர்.

டெல்லியில் உள்ள இந்திய பத்திரிகையாளர் சங்கம், கொரோனா காரணமாக உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு உரிய நிதி உதவி கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்து இருக்கக்கூடிய அதே நேரத்தில், 'பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா' ஏற்கெனவே இருக்கக்கூடிய பத்திரிக்கையாளர்கள் நல உதவி திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இருப்பினும் மருத்துவர்கள், செவிலியர்கள் போல பத்திரிகையாளர்களுக்கும் நிதி உதவியினை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்பொழுது எழுந்துள்ளது.

- நிரஞ்சன் குமார்