இந்தியா

இந்திய மக்களிடம் அதிகரிக்கும் உடல் பருமன் - ஐநா அறிக்கை  

webteam

இந்தியாவில் உடல் பருமனான மக்கள் அதிகரித்துள்ளதாக ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. 

ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ‘The State of Food Security and Nutrition in the World 2019 ’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் உலக நாடுகளில் நிலவி வரும் பசி, பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களின் எண்ணிக்கை 821.6 மில்லியனாக குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

அதேபோல உலகளவில் உடல் பருமனாக உள்ள மக்களின் எண்ணிக்கை 672.3 மில்லியனாக  அதிகரித்துள்ளது. இதில் இந்தியாவில் அதிகபட்சமாக 32.8 மில்லியன் மக்கள் உடல் பருமனாக இருந்து வருகின்றனர் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது கடந்த 2012ஆம் ஆண்டு இந்தியாவில் உடல் பருமனாக 24.1 மில்லியன் மக்கள் இருந்தனர். 2016-18ல் இந்த எண்ணிக்கை 32.8 மில்லியனாக அதிகரித்துள்ளது. 

எனினும் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களின் எண்ணிக்கை 194.4 மில்லியனாக குறைந்துள்ளது என்று இந்த அறிக்கை சுட்டி காட்டுகிறது. அதாவது 2004-05ல் 253.9 மில்லியன் மக்கள் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது 194.4 மில்லியனாக குறைந்துள்ளது. ஆகவே இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை விட உடல் பருமன் பிரச்னை அதிகரித்து வருகின்றது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.