உத்தரப்பிரதேச பேருந்து நிலையம் ஒன்றில் தாய்க்கு அருகே தூங்கிக்கொண்டிருந்த எட்டு மாதக் குழந்தையை கடத்தும் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
மொராதாபாத்தில் உள்ள கல்ஷாஹீத் பேருந்து நிலையத்திற்கு ராணி என்பவர் எட்டு மாதக் குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது முன்பின் தெரியாத ஆண் மற்றும் பெண்ணும் அவரிடம் பேச்சுக் கொடுத்து, சிறிது நேரத்தில் நட்பாக பழகியுள்ளனர். தனது அருகே தூங்கிக்கொள்ளும்படியும் போர்வை, தலையணையும், குழந்தைக்கு மருந்தும் கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ராணிக்குத் தெரியாமல் அவரது எட்டு மாதக் குழந்தையை அவர்கள் கடத்தியுள்ளனர். இந்தக் கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் ராணி தூங்கிக் கொண்டிருந்த போது அவரது குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.