தென்மேற்கு பருவமழை வரும் 6ம் தேதி தொடங்கும் என எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ளது
தென்மேற்கு பருவமழையின் காலம் ஜூன் முதல் செப்டம்பர் வரை ஆகும். பொதுவாக இந்த காலக்கட்டத்தில் வட இந்தியா மற்றும் தென் இந்தியாவில் சில மாநிலங்கள் மட்டுமே நேரடியாக பலன் பெறுகின்றன. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யும். குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள அணைகள் தென்மேற்கு பருவமழையால் நிரம்புகின்றன. மேலும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பெய்தால் மட்டுமே காவிரி நீரும் சாத்தியமாகிறது.
மே அல்லது ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் பருவமழை இன்னும் தொடங்கவில்லை. வரும் 6ம் தேதி தொடங்கும் என எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ளது. அதேநேரம் இந்த ஆண்டு பருவமழை இயல்பை ஒட்டியே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது. இயல்பை விட 23% அதிகமான மழை அங்கு பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மழை கேரளாவில் இயல்பை விட குறைவாகவே பதிவாகும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வழக்கமாக மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்திலேயே பருவமழை கேரளாவில் பெய்ய துவங்கும் நிலையில், வரும் 6ஆம் தேதி தொடங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் மழை பொழிவில் மாற்றம் ஏற்படுமா என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் மழை பொழிவிற்கும் பருவமழை தொடங்கும் தேதிக்கும் தொடர்பில்லை என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சராசரியை விட குறைவாகவே மழை பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு அந்த நிலை மாறும் என மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.