இந்தியா

தொடங்குகிறது தென்மேற்கு பருவ மழை: கேரளாவுக்கு ரெட் அலர்ட்!

தொடங்குகிறது தென்மேற்கு பருவ மழை: கேரளாவுக்கு ரெட் அலர்ட்!

webteam

தென்மேற்கு பருவமழை கேரளாவில் 24 மணி நேரத்துக்குள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கமாக கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 6 நாட்கள் தாமதமாகி 7 ஆம் தேதி தொடங்கும் என ஏற்கெனவே இந்திய வானிலை தெரிவித்திருந்தது. நாடு முழுவதும் கோடை வெயில் காரணமாக வறட்சி நிலவி வரும் சூழலில், தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்குகிறது. அதன்படி அடுத்த 24 மணி நேரத்துக்குள் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தென்மேற்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளதாகவும், மேற்கு கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். அதன் காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களிலும் வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் அதிக அளவில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தவிர திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாளை முதல் அங்கு மழை பொழிவு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.