மழைக்கால கூட்டத்தொடர்
மழைக்கால கூட்டத்தொடர் File Image
இந்தியா

ஜூலை 20 மழைக்கால கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகள் எழுப்ப இருக்கும் முக்கியப் பிரச்னைகள்!

PT WEB

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 20ஆம் தேதி தொடங்கும் என மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் முதல் கூட்டத்தொடராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் என பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாதங்களாக தொடரும் வன்முறை மற்றும் பொது சிவில் சட்டம் தொடர்பான சர்ச்சை ஆகியவற்றுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்த உள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மழைக்கால கூட்டத் தொடரில் கடுமையான கண்டனம் தெரிவிக்க உள்ளனர். மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் ஆளுநரை, திரும்பப் பெற வேண்டும் என திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விசிக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த உள்ளனர். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது ஆளுநரின் அத்துமீறல் போக்கைக் காட்டுவதாக இவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர்.

டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான அதிகாரத்தை மத்திய அரசு கையில் ஒப்படைக்கும் அவசர சட்டத்தை நிரந்தரமாக்க, மழைக்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவை எதிர்க்க பெரும்பாலான எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ள நிலையில், காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவிக்காதது ஆம் ஆத்மி கட்சிக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

new parliament building

ஓரணியாக திரளுமா எதிர்க்கட்சிகள்?

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு மசோதா தாக்கல் செய்யலாம் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், அகில இந்திய முஸ்லிம் லீக், சமாஜ்வாதி கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, அகாலி தளம், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டுள்ளன.

அதேசமயத்தில், பொது சிவில் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளிக்க முனைந்திருப்பதால் பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் விரிசல்கள் உருவாகி உள்ளன. பிஜு ஜனதா தளம் கட்சி பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியும் சர்ச்சைக்குரிய இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர். ஆகவே பாஜகவுக்கு எதிராக பொது சிவில் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரளுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Modi - Rahul Gandhi

மணிப்பூர் கலவரம்

அதே சமயத்தில் மணிப்பூர் கலவரத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் ஒரே குரலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ’அமெரிக்கா பயணம் செய்ய அவகாசம் உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மணிப்பூர் சென்று கள நிலவரத்தை கண்டறிந்து அமைதிக்கான முயற்சிகளை முடிக்கிவிட ஏன் நேரமில்லை’ என எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்த உள்ளன.

உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூரில் முகாமிட்டு பல்வேறு ஆலோசனைகளை நடத்தியபோதிலும், வன்முறை இன்னமும் தொடர்கிறது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்த உள்ளன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் சென்றபோது, அவரை சாலை மார்க்கமாக பயணிக்க ஏன் அனுமதிக்கவில்லை என்கிற கேள்வியை காங்கிரஸ் கட்சி எழுப்ப உள்ளது.

ராகுல் காந்தி மணிப்பூர் பயணம்

சோதனை ஓட்டங்கள்

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை அமர்வுகளை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

அதிநவீன வசதிகள் கொண்ட புதிய நாடாளுமன்ற வளாகத்தில் உறுப்பினர்கள் பேசுவதற்கான மைக் உள்ளிட்ட சாதனங்கள், மொழிபெயர்ப்பு ஏற்பாடுகள், மற்றும் எலக்ட்ரானிக் முறையில் வாக்களிக்கும் ஏற்பாடுகள் ஆகியவை சரியாகச் செயல்படுகிறதா என சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன. புதிய நாடாளுமன்ற வளாகத்தின் திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், மழைக்கால கூட்டத் தொடரில் சர்ச்சைக்குரிய பல்வேறு விவகாரங்களால், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. அதே சமயத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது எனவும் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது எனவும் வலியுறுத்த உள்ளனர்.

- கணபதி சுப்ரமணியம்