இந்தாண்டு பருவ மழை இயல்பான அளவிலேயே பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரம் இந்தியாவில் தொடங்கும். இந்தத் தென் மேற்கு பருவமழை இந்தியாவில் பெய்யும் மொத்த மழையில் 70% மழையை தரும். அதனால் இப் பருவமழையை விவசாயிகள் பயிர்களை பயிரிடுவார்கள். இந்த வருடம் பருவ மழை வழக்கத்தை விட சற்று குறைவாக இருக்கும் எனப் பல தனியார் வானிலை ஆய்வு மையங்கள் கணித்திருந்தன.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் பருவமழை குறித்த கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் பருவமழை 96% பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பருவமழை வழக்கமான அளவில் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏனென்றால் 1951ஆம் ஆண்டு முதல் 2000 வரை பெய்துள்ள மழைகளின் சராசரி அளவிலிருந்து 96% மழை பதிவாவதால் பருவமழை வழக்கமான அளவில் இருக்கும். இந்தச் சதவிகிதம் 90-95% ஆக இருந்தால் பருவமழை குறைவாக பதிவாகும். அந்த நிலை தற்போது இல்லை. கடந்த 2017ஆம் ஆண்டு பருவமழை 95 சதவிகிதமாக பதிவாகியிருந்தது. மேலும் 2018ஆம் ஆண்டு இது 91 சதவிகிதமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.