இந்தியா

இந்தியாவுக்கும் பரவியதா குரங்கு அம்மை? 5 வயது குழந்தையின் மாதிரிகள் அனுப்பிவைப்பு

சங்கீதா

இந்தியாவில் குரங்கு அம்மை நோய் அச்சம் இருந்து வரும் நிலையில், 5 வயது குழந்தையின் மாதிரிகளை ஆய்வுக்கு உத்தரப்பிரதேச அரசு அனுப்பியுள்ளது.

12 நாடுகளில் இதுவரை 80-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் இதன் அச்சம் மக்களிடையே பரவலாக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, உத்தரப்பிரதேச மாநிலம் காசியபாத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி 5 வயது குழந்தை ஒன்று, காது கேளாதோர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது.

அப்போது அக்குழந்தையின் உடம்பில் சொறி, அரிப்பு இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள் உத்தரப்பிரதேச சுகாதரத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் சுகாதாரக் குழு, குழந்தையின் இல்லத்திற்கு சென்று குழந்தையின் மாதிரிகளை எடுத்து புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.


மேலும் குழந்தையின் பயண விவரங்களை அதிகாரிகள் சேகரித்து உள்ளனர். அப்போது கடந்த 1 மாதத்தில் குழந்தை வெளிநாடு சென்று வரவோ அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்போ இருந்ததாக இல்லை. மேலும், குழந்தைக்கு தலைவலி , காய்ச்சல் போன்ற குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் இல்லை எனவும், இருப்பினும் ஆய்வக பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை குழந்தையை தனிமைப்படுத்த அதிகாரிகள் தெரிவித்து உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வக பரிசோதனைக்குப் பிறகு குழந்தைக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டால் இந்தியாவிலும் குரங்கு அம்மைக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.