Monitoring of students' personal details X
இந்தியா

இதற்குத்தான் ஆதார் கொண்டுவரப்பட்டதா ? வெளியாகும் மாணவர்களின் தனிவிவரம்... AI மூலம் கண்காணிப்பு !

டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் தனிநபர்களின் விவரங்கள் காவல்துறையின் AI முக அங்கீகார வாகனத்தில் பதிவாகுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

டெல்லியில் நீட் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டித்து மாணவர்கள் நடத்தும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. முதலில் சாதாரணமாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து இது மாபெரும் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து கூடி போராட்டத்தின் வீரியத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அதே நேரம் இந்த போராட்டத்தை முடக்கும் வகையில் மெட்ரோ நிலையங்களை மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் டெல்லி அரசு எடுத்து வருகிறது.

அதோடு டெல்லி பல்கலைக்கழகம் அதன் மாணவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், போராடும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியையும் எதிர்கால வேலைவாய்ப்புகளையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களைக் கண்காணிப்பதற்காக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய முக அங்கீகார (Facial Recognition) வாகனங்களை டெல்லி காவல்துறை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பரவும் வீடியோவில் காவல்துறையின் அந்த வாகனத்தில் இருக்கும் திரையில், வெளியில் போராட்டம் நடத்துவோரின் முகங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, அதில் சில குறிப்பிட்ட நபர்களின் பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் உடனுக்குடன் தோன்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இது போன்ற தனிநபர் விவரங்கள் மத்திய அரசின் 'ஆதார்' (Aadhaar) தரவுத்தளத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதால், இது ஆதார் தகவலோடு இணைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் போராட்டத்தில் பங்கேற்கும் நபர்களை அடையாளம் காண்பது இதன் நோக்கமல்ல என்று டெல்லி காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. போராட்ட கூட்டத்தில் குற்றவாளிகள், சமூக விரோதிகள் அல்லது வன்முறையாளர்கள் உள்ளே நுழைந்தால், அது குறித்து எச்சரிக்கை கொடுக்கும் விதமாகவே இந்த AI சிஸ்டம் பயன்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரம் ஜனநாயக ரீதியாகப் போராடுபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுவதற்கு சமூக வலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.