இந்தியா

"என் வீட்டில் யாரோ பணத்தை வைத்து என்னை மாட்டி விட்டுள்ளனர்" - பார்த்தா சாட்டர்ஜி உதவியாளர்

ச. முத்துகிருஷ்ணன்

மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி தனது வீட்டில் அமலாக்கத்துறை கைப்பற்றிய பணம் தன்னுடையதே அல்ல என்றும் தான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து யாரோ வைத்துவிட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு பார்த்தா சாட்டர்ஜி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதற்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, தற்போது அந்த மாநிலத்தின் தொழில்துறை அமைச்சராக இருக்கும் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூலை 23-ம் தேதி கைது செய்தனர்.

இதனையடுத்து பார்த்தா சாட்டர்ஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டில் ரூ.50 கோடி பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்க நகைகள் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பேசிய அர்பிதா முகர்ஜி, “அந்தப் பணம் எனக்கு சொந்தமானது அல்ல. நான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து யாரோ அதை வீட்டிற்குள் வைத்துவிட்டார்கள்” என்று தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பார்த்தா சாட்டர்ஜி, “மீட்கப்பட்ட பணம் எனக்கு சொந்தமானது அல்ல. எனக்கு எதிராக யார் சதி செய்கிறார்கள் என்பதை காலம்தான் சொல்லும். இதுபோன்ற பரிவர்த்தனைகளில் தான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை” என்று தெரிவித்தார்.