இந்தியா

ராபர்ட் வதேராவை கைது செய்‌ய மார்ச்-2 ‌வரை தடை

ராபர்ட் வதேராவை கைது செய்‌ய மார்ச்-2 ‌வரை தடை

rajakannan

லண்டனில் முறைகேடாக சொத்து வாங்கிய வழக்கில், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவை வரும் 2ம் தேதி வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக வதேராவைக் கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை
இன்றுடன் முடிவதாக இருந்த நிலையில், அது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

லண்டனில் சொத்து வாங்கியதில் சட்ட விரோத‌ பணப்பரிமாற்றம் நடந்ததாக வதேரா மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு
செய்துள்ளது. அதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், தன்னை அமலாக்கத் துறை கைது செய்‌ய
நீதிமன்றத்தில் வதேரா ‌இடைக்காலத் தடை பெற்றுள்ளார். இத்தடைக் காலத்தை நீட்டிக்குமாறு அவர் தாக்கல் செய்த மனுவுக்கு
அ‌மலாக்கத் துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வதேரா விசாரணைக்கு ‌ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத்துறை
குற்றஞ்சாட்டிய நிலையில் அதற்கு வதேரா தரப்பில் ‌மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, தனது நிறுவன சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது அதிகார துஷ்பிரயோகம் என பிரியங்கா காந்தியின்
கணவர் ராபர்ட் வதேரா குற்றம்சாட்டியுள்ளார். அதிகாரிகளிடம் விசாரணையின்போது எந்த விவரங்களையும் மறைக்கவில்லை
என்று கூறிய வதேரா, தான் சட்டத்திற்கு மே‌லானவனும் அல்ல என்றும் தெரிவித்தார். தினமும் 8 முதல் 12 மணி நேரம்
வீதம் 6‌ நாளுக்கு தன்னிடம் விசாரணை நடைபெற்றதாகவும் கழிவறைக்குச் செல்லும்போது கூட காவல‌ர்கள் உடன்
வந்ததாகவும் வதேரா தெரிவித்தார். 

முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் வதேராவின் நிறுவனத்தின் 4 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்புள்ள
சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருந்தது. முன்னதாக, அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நிலம் வாங்கியதில் முறைகேடு நடைபெற்ற வழக்கில் வதேரா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.