கர்நாடக முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமாரின் காவலை செப்டம்பர் 17ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டில் கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமாரை அமலாக்கத்துறை கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி கைது செய்தது. செப்டம்பர் 13ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வந்த அமலாக்கத்துறையினர், அவரது மகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
டி.கே.சிவக்குமாரின் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவரை டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் ஆஜர்ப் படுத்தினர். அப்போது, மேலும் சில விசாரணைகள் நடத்த வேண்டியுள்ளது என அமலாக்கத்துறையினர் முறையிட்டனர். உடல்நிலை சிக்கல்களை சுட்டிக்காட்டி சிவக்குமாரை விடுவிக்க வேண்டும் என்று அவரது தரப்பில் ஆஜரான காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட சிபிஐ நீதிமன்ற நீதிபதி, டி.கே.சிவக்குமாரின் காவலை செப்டம்பர் 17ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.