இந்தியா

கேரளா: அம்மாவும் மகனும் எதிரெதிர் கட்சிகளில் நேருக்கு நேர் மோதல்... எதிர்பார்ப்பில் மக்கள்

Sinekadhara

கொல்லத்தில் பாஜகவைச் சேர்ந்த தாயும், சிபிஐ(எம்)-ஐ கட்சியை சேர்ந்த மகனும் நேருக்கு நேர் தேர்தலில் போட்டியிடுவது அப்பகுதி மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள பஞ்சவிலா தொகுதியைச் சேர்ந்தவர் சுதர்மா தேவராஜன். இவருடைய குடும்பம் நீண்ட நாட்களாகவே பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர். சுதர்மாவின் அப்பாவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்த சுதர்மா அவர்கள் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 335 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். ஒரு வருடம் முன்பு பாஜகவின் பெண்கள் தொகுதியான மஹிலா மோர்ச்சாவின் மண்டல குழு உறுப்பினராகியுள்ளார்.

இவருடைய மகன் தினுராஜ், பள்ளிப்பருவத்திலிருந்தே இந்திய மாணவர் கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்துள்ளார். பள்ளிக்கல்வியை வயநாட்டில் முடித்த இவர் தனது சொந்த ஊரான எடமுலாக்கலுக்கு வந்தவுடனே, இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பில் சேர்ந்துள்ளார். கொரோனா காலத்தில் அந்த அமைப்பில் கிச்சன் வேலையில் இறங்கி, ஏழைகளுக்கு உணவு கொடுப்பதில் அக்கறையாக செயல்பட்டுள்ளார். அவரின் சேவையைப் பாராட்டி இந்தமுறை சிபிஐ(எம்) கட்சி சார்பில் தேர்தல் உறுப்பினராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இதுபற்றி சுதர்மா கூறுகையில், ‘’என் மகன் இந்தமுறை தேர்தலில் போட்டியிடுவது தெரிந்தால் நான் பின்வாங்குவேன் என்று நினைத்து அவனை நிறுத்தியுள்ளனர். ஆனால், குடும்பம் வேறு, அரசியல் வேறு. தேர்தலில் போட்டியிடுவதால் நான் என் மகனுக்கு சாப்பாடு கொடுக்காமல் இருக்கப் போவதில்லை, அவனும் என்னை அம்மா என்று கூப்பிடாமல் இருக்கப்போவதில்லை. தினுவின் அப்பா என்னுடன் ஒருநாள் பிரசாரத்தில் கலந்துகொண்டார். ஆனால் மகன் வருத்தப்படுவான் என்று அவரை என்னுடன் வரவேண்டாம் எனக் கூறிவிட்டேன்’’ என்று கூறுகிறார்.

காலை 5-6 மணிக்குள் தினு வீட்டை விட்டு சென்றுவிடுகிறார். தேர்தல் காரணமாக தன்னை சந்திக்க வருகிறவர்கள் சங்கடப்படக்கூடாது என்பதற்காக தேர்தல் முடியும்வரை தன்னுடைய முன்னோர் வீட்டில் தனியாக வசித்துவருகிறார்.