இந்தியா

ரம்ஜான் நோன்பை பாதியில் முடித்து இந்து சிறுவனுக்கு ரத்த தானம்

webteam

பீகாரில் இஸ்லாமியர் ஒருவர் ரம்ஜான் நோன்பை பாதியில் முடித்து, இந்து சிறுவனுக்கு ரத்த தானம் வழங்கிய நெகிழ்ச்சியான சம்‌‌பவம் நிகழ்ந்துள்‌ளது.

கோபால் கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த பூபேந்திரகுமார் என்பவரின் மகன், தெலாஸ்மியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி அவருக்கு புதிதாக ‌ரத்தம் ஏற்றப்பட வேண்டும். இந்த நிலையில் திடீரெ‌‌ன சிறுவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால் அந்தச் சமயத்தில் அவனுக்கு தேவையான ரத்த வகை எங்கும் கிடைக்கவில்லை, இந்தச் சூழலில் மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஆலம் ஜாவீத் என்பவருக்கு அதே வகை ரத்த பிரிவு இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டார்.

ஆனால் அவர் நோன்பிருப்பதால் ரத்தம் எடுக்க முடியாது என மருத்துவர்கள் கூற, சிறுவனை காப்பாற்றுவதற்காக உடனடியாக நோன்பை பாதியில் முடித்து கொண்டு ரத்த தானம் செய்தார். சிறுவனின் குடும்பத்தினர் ஆலம் ஜாவீத்தின் உதவியை என்றும் மறக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார். மனிதாபிமானத்துடனே இந்த உதவியை செய்ததாக ஆலம் ஜாவீத் கூறியுள்ளார்.