இந்தியா

“அபிநந்தன் பெயருக்கே புதிய அர்த்தம்” - பிரதமர் மோடி புகழாரம்

“அபிநந்தன் பெயருக்கே புதிய அர்த்தம்” - பிரதமர் மோடி புகழாரம்

webteam

அபிநந்தன் என்ற பெயருக்கு புதிய அர்த்தம் கிடைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை வீரரான விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். இதனையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று அறிவித்தார்.

அதன்படி பாகிஸ்தானின் ராவல் பிண்டி ராணுவ முகாமிலிருந்த அபிநந்தன் லாகூருக்கு நேற்று மாலை 4 மணியளவில் கொண்டு வரப்பட்டார். பின்னர் வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்ட அபிநந்தனை இரவு 9.10 மணிக்கு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது அபிநந்தன் கம்பீர தோற்றத்துடன், இந்திய எல்லையான அட்டாரி நோக்கி நடந்து வந்தார். அவர் தாயகம் திரும்பியதை நேரில் பார்த்தவர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அது மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசமும் அவரை வரவேற்று மகிழ்ந்தது. 

இந்நிலையில், டெல்லியில் கட்டுமான தொழில்நுட்ப கண்காட்சியை தொடக்கிவைத்து பேசிய நரேந்திர மோடி,‌ இந்தியாவின் செயல்களை உலகமே உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றார். இதுதான் இந்தியாவின் சக்தி எனவும் இதன் மூலம் அபிநந்தன் என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தம் கிடைத்துள்ளதா‌வும் மோடி தெரிவித்தார். அபிநந்தன் என்றால் வாழ்த்து என்ற‌ அர்த்தம், தற்போது மாறியுள்ளதாக மோடி குறிப்பிட்டார்.