கொரோனா தடுப்பூசி மீதிருக்கும் காப்புரிமைக்கு இடைக்கால தடை விதிக்கும் விவகாரத்தில், ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவிக்க வேண்டுமென, பிரதமர் மோடி ஆஸ்திரிலிய பிரதமருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுடன் தொலைபேசி வாயிலாக இன்று உரையாடி இருந்தார். அந்த உரையாடலின் போது, கோவிட்-19 தொற்றின் இரண்டாவது அலைக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு சரியான தருணத்தில் உதவிகளை வழங்கிய ஆஸ்திரேலிய அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் பிரதமர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இந்த உரையாடலின்போது, சர்வதேச அளவில் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகளும், மருந்துகளும் அனைவருக்கும் சமமாகவும், எளிதாகவும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இருவரும் பேசியதாக சொல்லப்படுகிறது. அப்படி பேசும்பொழுது, டிரிப்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் விதிமுறைகளில் தற்காலிகத் தளர்வை மேற்கொள்ள வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு ஆஸ்திரேலியா ஆதரவு தருமாறு பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருக்கிறார்.
2020-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்ற மெய்நிகர் உச்சிமாநாடு முதல், இந்திய - ஆஸ்திரேலிய விரிவான கேந்திரக் கூட்டணியின் வளர்ச்சி குறித்துத் தலைவர்கள் கேட்டறிந்ததோடு, ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது ஆகியவை தொடர்பான ஆலோசனைகளிலும் ஈடுபட்டனர்.
மேலும், பிராந்திய விஷயங்கள் குறித்து ஆலோசித்த தலைவர்கள், விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஆணை, இந்திய - பசிபிக் பகுதியில் தடையற்ற திறந்தவெளிப் போக்குவரத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.