நீட் தேர்வு முறைகேடுகள் காரணமாக டெல்லியில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கேள்வித்தாள் கசிவைத் தடுக்க விரைவு நீதிமன்றங்கள், கடுமையான தண்டனைகள் குறித்து புதிய சட்டம் வருவதாக மோடி செல்ஃபி வீடியோவில் அறிவித்தார். இளைஞர்களை குறிவைத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வழியாக தொடர்ந்து வீடியோக்களை மோடி வெளியிட்டு வருகிறார்.
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்தும், இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக போராட்டக்காரர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளது.
இந்த சூழலில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம், எக்ஸ், பேஸ்புக் ஆகிய சமூக வளைதளங்களில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க விரைவு நீதிமன்றங்கள் அமைத்தல் மற்றும் கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் புதிய வரைவுச் சட்டம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதமர் மோடி மீண்டும் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் பதிவிட்ட வீடியோவுக்கு நீங்கள் பதிலளித்த விதமும், அளித்த நேர்மறையான ஆலோசனைகளும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் அன்பு தொடர்ந்து நீடிக்கும், நமது பிணைப்பு இன்னும் வலுவடையும் என்றும், உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என்றும் கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக பிரதமர் மோடியின் வீடியோ அவரின் அனைத்து சமூகவலைத்தள பக்கங்களிலும் வெளியாகும் நிலையில், இந்த வீடியோ பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய பக்கங்களில் மட்டுமே வெளியாகியுள்ளது. இதனிடையே இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கட்சியினருக்கு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும், அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து மத்திய அமைச்சர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே மோடியின் செல்ஃபி விடீயோக்கள் வெளியாகிறது என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்கள் மூலம் தவெக ஆட்சியை பிடித்ததாக கூறப்பட்ட நிலையில், திமுகவினர் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.