pm modi PTI
இந்தியா

“Gold வாங்காதீங்க… Foreign போகாதீங்க!” வெளிநாட்டில் இருந்து வீடியோ வெளியிட்ட மோடி! என்ன காரணம்?

உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானுக்கு 4 நாள் அரசுமுறை பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது கவனம் ஈர்த்துள்ளது.

PT WEB

உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணத்தில் இருந்து வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி, இந்தியாவின் 7.8% ஜிடிபி வளர்ச்சியை மக்களின் உழைப்பின் பலனாகக் கூறி பாராட்டுகிறார். உலகளாவிய போர், பொருளாதார நெருக்கடி சூழலில் இந்தியா நிலைத்த வளர்ச்சி பாதையில் இருப்பதை வலியுறுத்தி, தேவையற்ற தங்கம் வாங்குதல், வெளிநாட்டு சுற்றுலா, வெளிநாட்டில் திருமணம் நடத்துதல் ஆகியவற்றை குறைக்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானுக்கு 4 நாள் அரசுமுறை பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது கவனம் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததற்கு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அதே நேரத்தில் தேவைஇல்லாமல் தங்கம் வாங்குவதை தவிர்க்கவும், வெளிநாடுகளில் திருமணங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் பேசி இருக்கிறார்.

PM Narendra Modi

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறிய அவர், உலகம் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், இந்தியா இந்த மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் இதற்கு மக்களின் கடின உழைப்பும் மன உறுதியும் இணைந்ததன் பிரதிபலிப்பே இந்த வளர்ச்சி என்றும் பேசி இருக்கிறார். மேலும் கொரோனா காலத்திற்குப் பிறகு உலகளவில் நிலைத்தன்மை இல்லாத சூழல் தொடர்ந்தாலும், இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக பேசி இருக்கிறார்.

குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், உலகளாவிய சந்தைகளிலும் தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாக்க உள்ளூர் செலவினங்களுக்கும், பொருட்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தி இருக்கிறார். மேலும் அந்த வீடியோவில் “சுற்றுலாவுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லாதீர்கள்… வெளிநாடுகளில் திருமணங்களை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்… இந்தியாவில் திருமணம் என்ற எண்ணத்தை ஊக்குவிப்போம். அவசியமில்லாமல் தங்கம் வாங்குவதையும் குறைப்போம்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார். நாம் எந்த அளவிற்கு உள்ளூர் தயாரிப்புகளையும் சேவைகளையும் தேர்ந்தெடுக்கிறோமோ, அந்த அளவிற்கு இந்தியா முன்னேறும். நாம் சுயசார்பை தொடர்ந்து வலியுறுத்தினால், சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை எட்டும்போது, ​​வளர்ச்சி பெற்ற இந்தியாவை நமது இளைஞர்களிடம் ஒப்படைப்போம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என பேசி இருக்கிறார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது கவனம் பெற்று வருகிறது.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர