பசு பக்தியின் பெயரால் மனிதர்களைக் கொல்வதை ஏற்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் பெயரால் நாடு முழுவதும் நடைபெறும் வன்முறைகள் குறித்து கடைசியாக தனது மவுனத்தைக் கலைத்தார், பிரதமர் நரேந்திர மோடி. இந்தப் பிரச்னை குறித்து அகமதாபாத்தில் பேசிய அவர், “பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதும், தாக்குதல் நடத்துவதும் ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டில் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. பசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பசுக்களை பாதுகாப்பதில் மகாத்மா காந்தி மற்றும் ஆச்சார்யாவை விட யாரும் அக்கறை செலுத்த முடியாது. ஆனால் பசுக்களை காப்பாற்ற மனிதர்களைக் கொல்வதை காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை. அப்படி செய்வது பசு பக்தி ஆகாது. இது வன்முறையற்ற தேசம்; மகாத்மாவின் தேசம்; அதை ஏன் மறந்துவிடுகிறீர்கள். வன்முறைகள் ஒருபோதும் பிரச்னைக்கு தீர்வாகாது. அனைவரும் ஒன்றாக மகாத்மாவின் கனவை நனவாக்க உழைப்போம்” என்று மோடி பேசினார்.