இந்தியா

பக்கத்து நாடுகளுடன் பகையை வளர்த்தார் மோடி - ராகுல் தாக்கு

பக்கத்து நாடுகளுடன் பகையை வளர்த்தார் மோடி - ராகுல் தாக்கு

webteam

மோடி அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் அண்டை நாடுகளுடன் பகையை வளர்த்துக் கொண்டுள்ளது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகத் தாக்கியுள்ளார். 

பெங்களூருவில் இந்திரா கேன்டீன்களை திறந்து வைத்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், பின்னர் கட்சி தொண்டர்களுடனான கூட்டத்தில் பேசினார். ராகுல் தனது உரையில், "செங்கோட்டையில் பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரையை கேட்டு விட்டு வந்த காங்கிரஸ் தலைவர், அது மிகச் சிறிய உரை என என்னிடம் கூறினார். பேசுவதற்கு ஒன்றும் இல்லாததால் மோடி தனது உரையின் கால அளவை குறைத்துக் கொண்டுள்ளார். அவர் தனது உரையில் கடந்த 8 ஆண்டுகளில் வேலையில்லாதவர்களின் விகிதம் எவ்வளவு அதிகரித்துள்ளது என குறிப்பிடவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக கூறியிருந்தார். அது என்ன ஆனது என்றும் கூறவில்லை" என குற்றஞ்சாட்டினார். 

மேலும் பேசிய அவர், "கோரக்பூரில் 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததற்கு அவரது சுகாதார கொள்கைதான் காரணம் என கூறவில்லை. இவரது அரசு சுகாதாரத்துறைக்கான பட்ஜெட்டை குறைத்ததால் குழந்தைகளுக்கான ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான சீன வீரர்கள் நமது எல்லைக்குள் நுழைந்த சமயத்தில் இங்கு வந்த சீன அதிபரை, பிரதமர் மோடி கட்டி அணைத்து வரவேற்கிறார். சீன படைகள் இன்னும் பூடான் பகுதியில் இருப்பதை பற்றி மோடி பேசினாரா?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 

"காஷ்மீரில் அமைதியை கொண்டு வர கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் கடுமையாக உழைத்தோம். அது அத்தனையையும் ஒரே மாதத்தில் அழித்து விட்டது மோடி அரசு. முதல் முறையாக ரஷ்யா, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை விற்றுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மோடி அரசு அண்டை நாடுகளுடன் பகையை வளர்த்துக் கொண்டுள்ளது. சீனா, பாகிஸ்தான் தவிர அனைத்து நாடுகளும் நம்முடன் நட்பாக இருந்தன. ஆனால் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இலங்கையில் சீனா துறைமுகம் அமைத்து வருகிறது. சமீபகாலமாக எல்லையில் நிகழும் அசாதாரண சம்பவங்களுக்கு மோடி அரசுதான் காரணம்" என்றும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.