Indians
Indians pt desk
இந்தியா

‘ஆப்ரேஷன் காவேரி’ - சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க சவுதி அரேபியா புறப்பட்ட மத்திய அமைச்சர்!

Kaleel Rahman

சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நடைபெற்று வரும் கடுமையான மோதல் காரணமாக சூடான் நாடு போர்க்களமாக மாறியுள்ளது. இதனால் அங்கு இந்தியர்கள் உட்பட பல்வேறு வெளிநாட்டவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்தியர்களில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 3000 முதல் 4000 இந்தியர்கள் வரை சூடான் நாட்டில் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ளார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர்களை மீட்க இந்திய கடற்படையின் சுமேதா கப்பல் 'போர்ட் சூடான்' என அழைக்கப்படும் சூடான் நாட்டு துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த கப்பல், 500 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு சவுதி அரேபியா சென்று கொண்டிருப்பதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். சூடான் நாட்டில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களும் மீட்கப்படுவார்கள் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய போர்க்கப்பலில் புறப்படும் இந்தியர்களின் புகைப்படத்தை வெளியிட்டு உறுதியளித்துள்ளார்.

Sudan Civil war

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா விமான நிலையத்தில் இந்திய விமானப்படையின் இரண்டு போக்குவரத்து விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை கப்பல் மூலமாக சவுதி அரேபியா வரும் இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் என வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவம்-துணை ராணுவம் மோதல் தொடர்ந்து தீவிரமாக உள்ள நிலையில், எந்தவித சிக்கலும் இல்லாமல் சூடானில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் மீட்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

சென்ற வாரம் டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி ‘இதற்கான விரிவான மீட்பு திட்டத்தை உருவாக்கவேண்டும்’ என அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து 'ஆபரேஷன் காவேரி' திட்டம் மும்முரமாக தொடங்கப்பட்டது.

அதன்கீழ்தான் அந்தத் திட்டத்தின் பணிகளை ஒருங்கிணைக்க மத்திய அமைச்சர் முரளிதரன் சவுதி அரேபியா அனுப்பப்பட்டுள்ளார். நேற்று கேரளாவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அப்போதே முரளிதரனுடன் ஆலோசனை நடத்தி, உடனடியாக ஜெட்டா செல்லும்படி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து முரளிதரன் உடனடியாக சவுதி அரேபியா புறப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Riot at Sudan

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்க சூடான் நாட்டில் பல்வேறு குழுக்களுடன் இந்திய தூதரக அதிகாரிகள் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியர்களுக்கு எந்தத் தீங்கும் இல்லாமல் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பேச்சு வார்த்தைகள் நடத்தப்படும் நிலையில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் போர் நிறுத்தம் தொடர்பான ஆலோசனைகளும் தொடர்ந்து நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.