நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் சென்னை வந்திருந்த போது இதுகுறித்து முதல்வரிடம் பிரதமர் பேசியதாக தெரிகிறது. தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி தேவைப்படுவதால் நியூட்ரினோ திட்டம் முடங்கியுள்ளது. இந்நிலையில் பிரதமரின் அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து தடைக்கற்கள் ஏதும் இருப்பின் அதை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்ஹாவுக்கும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம் போடி மலைப்பகுதியில் அணுவை விட மிகச்சிறிய கண்ணுக்கு புலப்படாத நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆய்வு செய்யு்ம் முயற்சி கடந்த 10 ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. ஆனால் இத்திட்டத்தால் அருகிலுள்ள இடுக்கி, முல்லைப்பெரியாறு ஆகிய அணைகளுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள நீராதாரங்களுக்கும் கேடு விளையும் என எதிர்ப்புகள் கிளம்பியது. எனவே இத்திட்டம் முடங்கியுள்ளது.