PM Modi
PM Modi pt desk
இந்தியா

திருவனந்தபுரம் டூ காசர்கோடு: கேரளாவின் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

Kaleel Rahman

திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையே கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவை திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, பத்தனந்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 11 மாவட்டங்களை உள்ளடக்கி செல்கிறது.

PM Modi

இதையடுத்து ரூ.3,200 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின் நிறைவடைந்த சில திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதில், கொச்சி நீர் வழி மெட்ரோ திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த புது வகையான மெட்ரோ திட்டம், மின்சார படகுகள் மூலம் கொச்சியில் இருக்கும் பத்து தீவுகளை இணைக்கின்றது. இதுதவிர திண்டுக்கல் - பழனி - பாலக்காடு பிரிவில் மின்சார மயமாக்கப்பட்ட ரயில் சேவையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்த நிகழ்வில் திருவனந்தபுரம், கோழிக்கோடு, வர்க்கலா சிவகிரி ரயில் நிலையங்கள் ஆகியவற்றின் மறுசீரமைப்பு திட்டங்கள், நேமன் - கொச்சுவேலி பகுதிகளை உள்ளடக்கிய திருவனந்தபுரத்தின் சில இடங்களை இணைக்கும் விரிவான வளர்ச்சித் திட்டம் மற்றும் திருவனந்தபுரம் - ஷோரனூர் பகுதி வழித்தடத்தில் வேகத்தை அதிகரிக்கும் திட்டம் போன்றவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

PM Modi

மேலும் திருவனந்தபுரத்தில் டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய உள்கட்டமைப்பு வசதியைக் கொண்ட இந்த பூங்காவில், பல்கலைக்கழகங்களோடு இணைந்து தொழில்துறை நிறுவனங்கள், உற்பத்தித் தொடர்பான கூட்டு நடவடிக்கைகள் உட்பட நவீன ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு வழிவகை செய்யுமென கூறப்பட்டுள்ளது. இதற்கு முதல் கட்டமாக பகுதி-1 திட்டத்திற்கு ரூ.200 கோடி முதலீடும், இந்தத் திட்டத்திற்கான மொத்த மதிப்பீடாக ரூ.1,515 கோடி முதலீடும் செய்யப்பட உள்ளது.