மக்களவையில் கடந்த மார்ச் மாதம் தோற்கடிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை அரசு மீண்டும் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் பிளவுக்குப் பிந்தைய சாதகமான நிலையைப் பயன்படுத்தி மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு காய் நகர்த்துவதாக தெரிகிறது. மேற்கு வங்கத்தில் ஆட்சியை பறிகொடுத்த மம்தா பானர்ஜி தற்போது கட்சியையும் இழக்கும் நிலையில் உள்ளார்.
அக்கட்சியின் 78 எம்எல்ஏக்களில் 61 பேரும் எம்பிக்களில் 28 பேரில் 20 பேரும் மம்தாவுக்கு எதிராக திரும்பியுள்ளனர். மேலும் திரிணாமுல் காங்கிரஸில் மம்தாவின் எதிர்த்தரப்பு எம்பிக்கள் 20 பேரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். இதனால் மக்களவையில் பாஜக கூட்டணியின் பலம் 292இல் இருந்து 312ஆக அதிகரிக்க உள்ளது.
அதேநேரம், I-N-D-I-A கூட்டணி பலம் 190ஆக குறையும். மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்குச் சாதகமான நிலையே நிலவுகிறது. அங்கு, தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்குப் பலம் 148ஆக உள்ளது. இந்நிலையில் முன்னாள் ஆம் ஆத்மி எம்பிக்கள் வருகை, திரிணாமுல் அதிருப்தி எம்பிக்கள் ஆதரவு, விரைவில் நடைபெறும் தேர்தலில் கூடுதலாக கிடைக்கும் இடங்கள் அடிப்படையில் பாஜக கூட்டணியின் பலம் 167 வரை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி, I-N-D-I-A கூட்டணி இரண்டிலும் இல்லாத எம்பிக்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவற்றையெல்லாம் கொண்டு 3இல் 2 பங்கு எண்ணிக்கையுடன் மசோதாவை சட்டமாக்க முடியும் என அரசு கருதுகிறது. 2029 மக்களவைத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் தொகுதி மறுவரையறையும் முக்கியத்துவம் பெறும் எனக் கருதப்படுகிறது.