இந்தியா

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மாபெரும் திருப்பம்.. மத்திய அரசு செய்த அதிரடி மாற்றம்

JustinDurai

இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உடல் உறுப்பு தானம் பெறுவதற்கான விதிமுறைகளில் சில முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம். அதன்படி 65 வயதிற்குட்பட்டவர்களே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள தகுதியானவர்கள் என்றிருந்த விதிமுறை நீக்கப்பட்டு, இனி எந்த வயதிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியும் என திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து வயதினரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும் வகையில் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

அதேபோல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்புவோர் தங்கள் மாநிலத்தில் மட்டுமின்றி நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம். தற்போதைய விதிமுறைப்படி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்புவோர் அவர்கள் வசிக்கும் மாநிலத்தில் மட்டுமே பதிவு செய்து கொள்ள முடியும். மேலும் உறுப்பு மாற்று தேவைப்படுவோர் இனி பதிவு செய்யும்போது அதற்கான பதிவுக் கட்டணத்தை செலுத்த தேவையில்லை.

மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து உடல் உறுப்புகளைத் தானம் பெற்று பிறருக்குப் பொருத்துவதில் பல சிக்கல்கள் இன்றளவும் நீடிக்கத்தான் செய்கின்றன. அதில் முக்கியமான ஒன்று, கால விரயமின்றி உடல் உறுப்புகளை தானம் பெறுவோருக்குப் பொருத்த வேண்டும். இந்த சூழலில், டிரோன் மூலம் உடல் உறுப்புகளைக் கொண்டு செல்லும் வசதி நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் எத்தனை சதவீதம் அரசு மருத்துவமனைகளில் நடந்தது என்பது குறித்த தரவுகள் அரசிடம் இல்லை என்றாலும், இந்தியாவில் கணிசமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளிலேயே செய்யப்பட்டுள்ளன.

உடல் உறுப்பு தானத்தில் இரு வகைகள் உள்ளன. ஒன்று உயிருடன் இருக்கும் போது உடல் உறுப்புகளை தானம் செய்வது. இதில், பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்புகளை தானம் செய்யலாம். உயிருடன் இருக்கும்போது ஒருவர் சிறுநீரகம், கல்லீரலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி போன்ற உறுப்புகளை தானம் செய்யலாம். மற்றொன்று இறந்தபின் உறுப்புகளை தானம் செய்வது. இறந்தவரின் உடல் உறுப்புகளை அவர்களது குடும்பத்தினரின் அனுமதியுடன் தானமாகப் பெறலாம். இயற்கை மரணத்தின்போது கண்கள், இதய வால்வு, தோல், எலும்புகள் ஆகியவற்றை தானமாகப் பெறலாம். மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து இதயம், கல்லீரல், சிறுநீரகம், குடல், நுரையீரல் ஆகிய முக்கிய உறுப்புகள் அனைத்தும் பெற முடியும்.

2013 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு இடையில் உயிருள்ளவர்களிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகங்களை கொண்டு 9,834 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதே ஆண்டுகளில் இறந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகங்களை கொண்டு 1,589 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.  2013ஆம் ஆண்டில் 30 பேருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் 2022இல் 250 பேருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல்  2013ஆம் ஆண்டில் 23 பேருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் 2022இல் 138 பேருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை  செய்யப்பட்டிருக்கிறது.