சந்திரயான்-2 திட்டத்தின் கடைசி நேரத்தில் லேண்டர் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு இஸ்ரோ மையத்தில் இருந்து பிரதமர் மோடி இன்று காலை 8 மணிக்கு விஞ்ஞானிகள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கத்துடன் தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி பின்னடைவு ஏற்படுத்திய தாக்கத்தை உணர்ந்தேன் என தெரிவித்தார்.
“தாய் நாட்டின் கனவுகளை நினைவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளீர்கள். நமது விண்வெளி திட்டம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமல்ல. நிச்சயமாக நிலவை தொடும் முயற்சி வெற்றியடையும். எதிர்காலத்தில் நாம் மேலும் முயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது.” எனப் பேசினார். மோடியின் ஊக்க உரையைக் கேட்டு அங்கிருந்த பெண் விஞ்ஞானிகள் சிலர் உணர்ச்சிப்பெருக்கால் கண்ணீர் விட்டனர்.
மேலும் பேசிய பிரதமர் மோடி, ''புதிய விடியல் நமக்காக காத்திருக்கிறது. விஞ்ஞானத்தில் தோல்வி என்பதே இல்லை. விஞ்ஞானத்தின் அடிப்படையே முயற்சி செய்வது தான்; அதில் தோல்வி என்பதே இல்லை. நானும், நாடும் எப்போதும் விஞ்ஞானிகளுடன் இருக்கிறோம்” என ஊக்கம் அளித்து உரையாற்றினார். ”கடைசி நிமிட பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் அது தோல்வி அல்ல'' எனவும் தெரிவித்தார். பெங்களூரு மையத்தில் பேசிவிட்டு புறப்படும்போது பிரதமர் மோடியிடம் கண்ணீர்விட்டு இஸ்ரோ தலைவர் சிவன் அழுதார். சிவனை கட்டிப்பிடித்து பிரதமர் மோடி ஆறுதல் வார்த்தைகளை கூறி தேற்றினார்.