தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்பட்ட நிலையில், தற்போது நடந்த மக்களவைத் தேர்தலில் 350 தொகுதிகள் வரை பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வெற்றியின் மூலம் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி தனிபெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இதன் மூலம் நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். வரும் 30 ஆம் தேதி நரேந்திர மோடி பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், நிதிஷ் குமார், சிவசேனா, லோக் ஜன்சக்தி உள்ளிட்ட பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் தமிழகத்திலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர் பதவியை ஒதுக்குவது, பாஜக எம்.பிக்களுக்கு எந்தெந்த துறைகளை ஒதுக்குவது, கூட்டணி கட்சி தலைவர்களுக்கு எந்தெந்த துறைகளை விட்டுக்கொடுப்பது என முழுமையாக ஆலோசிக்கப்பட உள்ளது.